அடிப்படை செபங்கள் -II


பொதுக்கால மூவேளை மன்றாட்டு

ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூது உரைத்தார்.
மரியா தூய ஆவியாரால் கருவுற்றார்.              - அருள் நிறைந்த

இதோ ஆண்டவரின் அடிமை.
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்.                                            -அருள் நிறைந்த

வாக்கு மனிதர் ஆனார்.
நம்மிடையே குடிகொண்டார்.
                                      -அருள் நிறைந்த 

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
இறைவனின் புனித அன்னையே /
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மன்றாடுவோமாக
      இறைவா!/உம் திருமகன் மனிதர் ஆனதை/உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம்./ அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். /ஆமென்.

பாஸ்கா கால மூவேளை மன்றாட்டு

விண்ணக அரசியே! மனம் களிகூரும்.                 அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர்.
                                      அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்.
                                      அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனை மன்றாடும்.
                                      அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர்.
                                       அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்.
                                        அல்லேலூயா.
மன்றாடுவோமாக
         இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினால்/ உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் /நாங்கள் நிலை வாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற/அருள் புரியும்./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

நம்பிக்கை மன்றாட்டு

என் இறைவா / உமது திரு அவை நம்பிப் போதிக்கிற / உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால் / அவற்றை நான் உறுதியாக நம்புகிறேன்./ ஆமென்.

எதிர்நோக்கு மன்றாட்டு

என் இறைவா / நீர் தந்துள்ள வாக்குறுதிகளை / நான் ஏற்றுக்கொள்கிறேன். / எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால்/என் பாவங்களைப் பொறுத்து / எனக்கு உமது அருளையும் / விண்ணக வாழ்வையும் அளிப்பீர் என / உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். /ஆமென்.

அன்பு மன்றாட்டு

என் இறைவா / நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் / அனைத்திற்கும் மேலாக / உம்மை நான் முழு மனத்தோடு அன்பு செய்கிறேன். / மேலும் / என்னை நான் அன்பு செய்வது போல / பிறரையும் அன்பு செய்கிறேன். / ஆமென்.

செபமாலை செபிக்கும் முறை

1 சிலுவை அடையாளம் வரைதல்
2. செபமாலை செபிக்கும்முன் மன்றாட்டு
3. நம்பிக்கை அறிக்கை
4. இயேசு கற்றுத்தந்த மன்றாட்டு
5. தூதுரை மன்றாட்டு (மூன்று முறை)
6. மூவொரு கடவுள் புகழ்
7. மறை உண்மைகள்
8. இயேசு கற்றுத்தந்த மன்றாட்டு
9. தூதரை மன்றாட்டு (பத்து முறை)
10. மூவொரு கடவுள் புகழ்
11. ஓ என் இயேசுவே
12. செபமாலையின் இறுதியில்: முதன்மை வானதூதுரான

செபமாலை செபிக்கும் முன் மன்றாட்டு

அளவற்ற அன்பும் நன்மையும் கொண்ட இறைவா! சாதாரண எளிய மனிதராயும். நன்றியறியாத பாவிகளாயும் இருக்கிற அடியோர், மாட்சியும் புகழும் கொண்ட உமது திருமுன் செபம் செய்யத் தகுதியற்றவர்களாய் இருந்தாலும், உமது அளவற்ற இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு, உமக்குப் புகழ்ச்சியாகவும், அன்னை மரியாவுக்கு வாழ்த்தாகவும் ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும் செய்ய ஆவலாய் இருக்கிறோம். இந்தச் செபத்தை பக்தியோடு செய்ய அருள்தாரும்.

ஓ என் இயேசுவே!

ஒ என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்
உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பாக உதவி புரிந்தருளும்.

செபமாலையின் இறுதியில்

முதன்மை வானதூதரான புனித மிக்கேலே. வானதூதர்களான புனித கபிரியேலே. ரபேலே. திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே, நாங்கள் எத்துணைப் பாவிளாய் இருந்தாலும், நாங்கள் இப்பொழுது வேண்டிக் கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும் எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம்.

வாழ்க அரசியே மன்றாட்டு

வாழ்க அரசியே, இரக்கமிகு அன்னையே வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க தாயகம் இழந்த ஏவையின் மக்கள் தாயே என உமைக் கூலி அழைத்தோம்
கண்ணீர்க் கணவாய் நின்றுமை நோக்கிக் கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம். ஆதலால் எமக்காய்ப் பரிந்துரைப்பவரே. அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.
உம் திருவயிற்றின் கனியாம் இயேசுவை இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.
கருணையின் உருவே, தாய்மையின் கனிவே இனிமைத் தருவே, கன்னி மரியே! ஆமென்
புனித கன்னி மரியாவை நோக்கிப்
புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மிகவும் இரக்கமுள்ள தாயே / உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து / ஆதரவைத் தேடி / மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக / ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைவு கூர்ந்தருளும்./ கன்னியர்களுக்கு அரசியான கன்னியே / நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை /என்னைத் தூண்டுவதால் / நான் உமது திருவடியை நாடி வருகிறேன். / பாவியாகிய நான் உமது இரக்கத்திற்காக/துயரத்தோடு உம்திருமுன் காத்து நிற்கிறேன். / மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயே / என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கனிவுடன் கேட்டருளும். பிறப்புநிலைப் பாவம் இன்றிக் கருவான புனித மரியே/ பாவிகளுக்கு அடைக்கலமே / இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். / எங்கள்மீது இரக்கம் கொண்டு / எங்களுக்காக உம்முடைய திருமகனிடம் மன்றாடும்/ஆமென்.

சிலுவைப் பாதை

தொடக்கம்

இறை இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
ஏனெனில் புனித பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்
முடிவு
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே, இரக்கமாயிரும் இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள் இறைவனின் இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவனவாக.

இறந்தோருக்காக செபிக்கும்போது
நிலையான இளைப்பறுதலை ஆண்டவரே (இவருக்கு/ இவர்களுக்கு அளித்தருளும்.
முடிவில்லா ஒளி இவர் (கள்) மேல் ஒளிர்வதாக.




Comments