திருக்குடும்பம் விழா
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! திருக்குடும்பத்தின் திருவிழாவினைக் கொண்டாடும் இந்நன்னாளில் வாழ்த்துக்கள் கூறி அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
நாம் அனைவரும் குட்டித் திருச்சபையாகிய குடும்பத்தில் உருவாகி, வளர்க்கப்படுகின்றோம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்னும் வாக்கிற்கேற்ப நமது குடும்பங்கள் சிறப்பாக இறை நம்பிக்கையில் வளர்ந்திட இயேசு, அன்னை மரியாள் யோசேப்பு மூவரும் இணைந்த திருக்குடும்பத்தினை முன்னிறுத்திக் கூறுகிறோம்.
குடும்பமாகிய கூட்டில் கணவன்- மனைவி இருவரும் அன்றில் பறவையைப் போல் ஒருவரையொருவர் முழுமையாக அன்பு செய்து இறைவன் கொடையாகக் கொடுத்தக் குழந்தைகளைப் பொறுப்புடன் பேணிக் காக்க வேண்டும்.
குழந்தைகளை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் இறை நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்து, மனிதம் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். பாசங்களையும் நேசங்களையும் ஊட்டுவதோடு இயேசு கிறிஸ்துவையும் அவர்களுக்குள் ஊன்ற வேண்டும். உறவின் சங்கமமே குடும்பம்.
சமுதாயக் கூட்டமைப்பின் அடிப்படை அங்கமாக இறைவனால் அமைக்கப்பட்ட தெய்வீக அமைப்பாக நம் குடும்பங்கள் திகழ வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளை நம் குடும்பங்களில் வளர்த்தெடுக்க வேண்டும். ஒருவர் ஒருவருடைய பிரச்சினைகளைக் கையாளுவதிலும் பிரச்சினைகளைச் சந்திப்பதிலும் இணைந்து ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ நம் குடும்பங்களை இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம். நல்லிணக்கத்தோடு வாழும் வரம் வேண்டி இப்பலியினில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை
அன்பார்ந்தவர்களே! மகப்பேறு இன்றித் தவித்த அன்னா ஆண்டவரிடம் நம்பிக்கையுடன் கேட்டுப் பெற்றுக் கொண்ட தன் மகன் சாமுவேலை இறைவனுக்குக் காணிக்கையாக்கினார், தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் மகனுடன் காணிக்கைகளோடு இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்த நிகழ்வை விவரிக்கும் சாமுவேல் முதல் நூலின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
அன்பார்ந்தவர்களே! கடவுளிடம் நாம் உறுதியான நம்பிக்கைக் கொண்டு எதைக் கேட்டாலும் நாம் பெற்றுக் கொள்கிறோம். இறைவன் தந்த புதியக் கட்டளையின்படி, ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும். அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடிக்கும் போது அவரோடு இணைந்திருப்போம். கடவுரும் நம்மோடு இணைந்திருப்பார் என்று கூறும்ம் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்தின் வாசகத்திற்குக்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நன்மைகளின் நாயகரே இறைவா!
திருஅவையாம் குடும்பத்தை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், கன்னியர், பொதுநிலையினர் அனைவரும் உமது அன்பை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, உண்மையையும் பரிவிரக்கத்தையும் நிறைவாய்ப் பொழிந்து ஒற்றுமையுடனும் அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் திகழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அறிவிலும் பண்பிலும் சிறந்து பெற்றோருக்கும் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்த எம் இறைவா!
எங்களது குடும்பங்களில் வளரும் குழந்தைகள் அனைவரும் பெற்றோருக்கும் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக வாழ்ந்து, சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல் உள்ளமும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. மனிதர்களை அன்பு செய்து, நற்செய்தி அறிவித்திட மனிதராய் பிறந்த எம் அன்பு இறைவா!
உமது பிறப்பின் மகிழ்வை எங்களோடு உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், துன்பங்களில் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்தி உதவிடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அனைத்து உயிர்களையும் நேசிக்கும் அன்பு இறைவா!
உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் குடும்பக் கண்ணியத்தையும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வையும் கடைப்பிடிக்க அருள்தாரும். முரண்பட்ட கலாச்சாரங்களில் மூழ்கி விடாமலும், பலவிதமான சீர்கேடுளுக்கு இரையாகாமலும், உயரிய வாழ்வின் தெளிவினை நாங்கள் கண்டுணர்ந்து வாழும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comments