இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா 01 01 2025
திருப்பலி முன்னுரை
கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும் மாளிகைதான் புதிய ஆண்டு - அது காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம் மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம் உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம். புதிதாகப் பிறக்கும் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் பழையனவாகி மற்றொரு புத்தாண்டு பிறந்து கொண்டே இருக்கிறது. இறைத்தந்தை நமக்களித்துள்ள புத்தாண்டு 2025- ஐ மகிழ்வுடன் கரம் குவித்து வரவேற்போம்.
இன்று முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறோம். இறைவனின் அன்னையாகிய தூய கன்னிமரியாள் பெருவிழா. மனுவுரு எடுத்த பாலனுக்கு இயேசு எனப் பெயர் சூட்டிய விழா மற்றும் புத்தாண்டு விழா.
கடந்த ஆண்டிலே கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளையும், புதிய ஆண்டிலே வரவிருக்கின்ற நலன்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்திட சரியான தருணம் இந்த புத்தாண்டு பிறக்கின்ற நேரமே!
“இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணத்தைத் திண்ணமற இசைத்துக் கொண்டு இருந்து இன்புற்று வாழ்வீர்!” என்றார் பாரதி. வாழ்வாங்கு வாழ வாழ்த்துவது நமது பண்பாடு.
Ƙபெற்றோரின் ஆசி, வளத்தோடு வாழ்நாள்களைக் கூட்டும் ஆற்றல் கொண்டது. ஆசானின் ஆசி, அறிவுச் செல்வர்களாக உருவாக்கக்கூடியது. உங்கள் மீது அருளைப் பொழிவாராக. இப்புத்தாண்டு முழுவதும் கடவுள் நம்மைக் காப்பாராக என்ற வாழ்த்தொலியோடும்,
“உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான திட்டங்களே அன்றி கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல” என்று நம்பிக்கை தருகிறார் எரேமியா இறைவாக்கினர். (எரே 29:11)
ஆண்டின் தொடக்க நாளாகிய இன்று தாய்த்திருச்சபை தூய மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. கன்னிமரியாளின் அன்பும் பாசமும் பராமரிப்பும் பாதுகாப்பும் நம்மோடு இருந்து நம்மை ஆண்டு முழுவதும் காக்க வேண்டுமென்று அன்னை மரியாள் வழியாகக் கடவுளிடம் ஒப்படைப்போம்.
இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம். செவிகளுக்கு இனிமையானது. இயேசுவின் பெயருக்கு விண்ணவர் மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்ற சிந்தனையை மனதில் கொண்டு இயேசுவின் வழியில் பயணிக்க முயற்சியெடுப்போம்.பார்க்கும் முகமெல்லாம் பழகும் மனிதரெல்லாம் புதிதாய் பிறந்தவர்கள் என்ற புரிதலில் பகைமை துறப்போம். வெறுப்பை மறப்போம். எல்லோரும் புதிதாய் பிறப்பதால் அனைவரும் சகோதரர்களே என்ற உணர்வோடு உறவுப் பயணத்தை உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் தொடங்குவோம்.
“புலரும் இந்தப் புத்தாண்டில் நன்மைகள் நிரம்பட்டும் நம் நம்பிக்கைகள் நிமிரட்டும். புண்ணியம் பொங்கட்டும். புது நன்மைகள் பெருகட்டும.; உண்மைகள் ஒளிரட்டும்; சமூக உறவுகள் உயரட்டும். மன்னிப்பு மலரட்டும். மனித மனங்கள் விரியட்டும். வளமைகள் சேரட்டும் நம் வாழ்வு செழிக்கட்டும்! என்ற உணர்வோடு இத்திருப்பலியில் பங்கேற்போம். இறையாசீர் நிறைவாய் பெறுவோம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. விடிவெள்ளியாம் எம் இறைவா!
எம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர் அனைவரையும் சிறப்பாக ஆசீர்வதியும். இந்த புதிய ஆண்டில் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உம்மை மையப்படுத்தியதாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அருளின் ஊற்றே எம் இறைவா!
இந்த நன்னாளில் எமது நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். ஆயன் தம் மந்தைகளை வழிநடத்துவது போல் இவர்களும் பிறர் நலத்திற்காக உழைத்திடவும், மக்கள் நலனையே மையமாகக் கொண்டு ஆளுகின்ற மனப்பக்குவத்தை அவர்களுக்கு தந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!
எம் பங்கு திருஅவையை ஆசிர்வதியும். இப்புதிய ஆண்டில் இறையன்பிலும் பிறரன்பிலும் எங்கள் குடும்பங்கள் சிறந்திடவும், வறுமை நீங்கி செழுமை பிறந்திடவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா!
எம் பங்கில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் இறைஞானத்தில் வளரவும், கல்வி கேள்வி செல்வங்களில் சிறந்திடவும், எம் இளைஞர்கள் நவீன ஊடக உலகிலே தங்களை அழித்து விடாமல், உண்மையான வாழ்வின் நெறிகளை கண்டுணரவும், அதன்படி தங்கள் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comments