ஆண்டவரின் திருமுழுக்கு விழா 12 01 2025

 ஆண்டவரின் திருமுழுக்கு விழா 12/ 01 /2025




திருப்பலி முன்னுரை

“அகம் தூய்மையாகும்போது ஆண்டவரின் அன்பும், மகிழ்வும் அங்கு பெருகும்” என்ற சிந்தனையோடு, திருஅவையோடு இணைந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவதையும் அன்போடு வரவேற்கின்றோம்.

இயேசுவின் திருமுழுக்கு விழா, நம்மை மறு கிறிஸ்துவாக வாழ அழைக்கும் விழா. வானம் திறந்து ஆவியானவர் இறங்க, இறைத்தந்தை தம் மகனின் மீட்புப் பணிக்கு அதிகாரப்பூர்வமாக நடத்திய தொடக்க விழா. இயேசு உலகம் எனும் ஆற்றில் மூழ்கி, அமிழ்ந்து, மக்கள் எனும் நீரில் கலந்து, கரைந்து, மீட்புப் பணியைத் தொடங்கிய நாள். அவர் ஒரு இறைப் பணியாளர் என்பதை ஆவியினால் திருப்பொழிவு செய்யப்பட்டு, மனிதகுல கலாச்சாரப் பாரம்பரியத்தில் தன்னை இணைத்து தானும் ஒரு அங்கம் என்பதை உலகிற்கு காட்டுகிறார். இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானிலிருந்து வந்தக் குரல் ஒரு உண்மையை உலகறியச் செய்தது. நாம் பெறுகின்ற திருமுழுக்கும் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது. எனவே நாமும் இறைப்பணியாளர்களாக கடவுளை மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம். நமது வார்த்தையும் செயல்பாடுகளும் கடவுளுக்குச் சான்று பகர்ந்திட வேண்டும். இறைவன் நம்மைக் குறித்து மகழ்ச்சியடைகிறேன் என்னும் சொல்லுக்குப் பாத்திரமாக விளங்க அருள் வேண்டியவர்களாக இப்பலியில் பங்கேற்போம்.


முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் வருகையினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், பாவங்கள் மன்னிக்கப்பட்டது, ஆயனைப்போல மந்தையைப் பேணி காப்பார், பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டு, நீதி, நேர்மை, சமத்துவம் மலரும் என்று கூறும் எசாயா இறைவாக்கினரின் நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசுவே மனிதர் அனைவருக்கும் மீட்பர், நம் பாவங்கனிலிருந்து நம்மை மீட்டு புதுவாழ்வு வழங்கும் இறைவன் என்றும் நம் செயல்களால் அல்ல, இறைவனின் இரக்கத்தினால் நாம் விடுதலை பெற்றுள்ளோம் என்றும், நீரினாலும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்பார் என்று திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.


மன்றாட்டுகள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்பே உருவான இறைவா! இறைமகன் இயேசுவின் திருமுழுக்கு விழாவினைக் கொண்டாடும் திருஅவை, தூய வாழ்வு வாழ்ந்து, மக்களை அன்பிலும், ஒற்றுமையுடன் விசுவாசத்திலும் வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மையின் இறைவா! நாட்டுத் தலைவர்கள் மக்களின் நலன் கருதி, தியாக உள்ளத்தோடு பணி செய்து சமுதாயம் வளர்ச்சி பெற உதவிட அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் தரும் இறைவா! திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தூய வாழ்வு வாழ்ந்து கிறிஸ்துவின் சாட்சிகளாக பாவ வாழ்விலிருந்து விடுபட்டு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வழிநடத்தும் இறைவா! எம் நாட்டில் உள்ள இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் அனைவரும் நல்வாழ்வு பெற்று வளமுடனும், அன்புடனும் வாழ்ந்திட அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


Comments